கோரிக்கை
குப்பைத் தொட்டிக்கு தீ வைத்த மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை;
ஈரோடு மாநகராட்சி குப்பைத் தொட்டிக்கு தீ வைத்து புகை மாசு ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு குப்பை இல்லாத தூய்மை நகரமாக மாற்றும் வகையில், மாநகராட்சியின் சார்பில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த குப்பை, ஈரோடு மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கழிவிலிருந்து உரம் தயாரிக்கும் உரக்கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.மாநகராட்சியில் அனைத்து வார்டுகளிலும் குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், உழவர் சந்தைகள், காய்கனி சந்தைகளில் உள்ள குப்பைகளை சேகரிக்க, அப்பகுதிகளில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி 1வது வார்டுக்கு உட்பட்ட ராயபாளையத்தில் குப்பையை சேகரிக்க குப்பைத் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. நேற்று பட்ட பகலிலேயே மர்ம நபர்கள், குப்பைத் தொட்டியில் தீ வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது : இப்பகுதியில் தினசரி இரவு மர்ம நபர்கள் குப்பைத் தொட்டிக்கு தீ வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதனால், மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் குப்பைத் தொட்டியில் உள்ள குப்பைகளை அகற்ற முடிவதில்லை. தீ வைப்பதால் ஏற்படும் புகையால், இப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகி பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. மேலும், குப்பைத் தொட்டியும் எரிந்து சாம்பலாகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பட்ட பகலிலேயே மர்ம நபர்கள் குப்பைத் தொட்டிக்கு தீ வைத்துள்ளனர். எனவே, குப்பைத் தொட்டிக்கு தீ வைத்து விட்டுச் செல்லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.