மனு
திமுக பிரமுகர் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்தில் திரண்டு வந்து மனு கொடுத்த மக்கள்;
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட அடுக்குப்பாறை, ஆறுபடையான் நகர், குபேரன் நகர், கிருஷ்ணா நகர் போன்ற பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் இன்று ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:- அடுக்கு பாறை பகுதியில் சின்ன மாரியம்மன் கோவில் உள்ளது.சுமார் 60 ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில் எங்கள் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் கோயில் திருவிழாவை காவல்துறை அனுமதியுடன் சிறப்பாக நடத்தி வருகிறோம். இந்நிலையில் மாரியம்மன் கோவில் அருகே தி.மு.க.வைச் சேர்ந்த பிரமுகர் புதிதாக வீடு கட்டி தற்போது குடியிருந்து வருகிறார். அந்த நபர் மாரியம்மன் சாமியை தவறாக கூறி எங்கள் வழிபாட்டு முறைகளை இழிவுபடுத்தி ஒற்றுமையுடன் இருக்கும் எங்கள் ஊர் பொதுமக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.மேலும் பல தவறான தகவலையும் பரப்பு வருகிறார். அந்த நபர் அவரது வீட்டில் மூன்று நாய்களை வளர்த்து வருகிறார். இதனால் அந்தப் பகுதியை கடந்து செல்ல பொதுமக்கள், பெண்கள் குழந்தைகள் அச்சப்படுகின்றனர். எனவே திமுக பிரமுகர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.