ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமான மதுவிற்பனையை தடுக்கும் வகையில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னிமலை அருகேயுள்ள எல்லக்காடு டாஸ்மாக் கடை பகுதியில், ஈரோடு மதுவிலக்கு போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் புதர் மறைவில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வது தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார், மது விற்பனையில் ஈடுபட்டு வந்த சிவகங்கை மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த அரவிந்த் (24) என்பவரை கைது செய்து, அவரிடம் இருந்த 26 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதேபோன்று, நம்பியூர் அடுத்த பழனி கவுண்டம்பாளையம் பஸ் நிறுத்தத்தில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த, சிவகங்கை மாவட்டம் கண்டியூரைச் சேர்ந்த விக்னேஷ்(30) என்பவரை கைது செய்த கடத்தூர் போலீசார், அவரிடம் இருந்த 8 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.