பல்லடத்தில் கோர விபத்து ஸ்கூட்டர் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்து மகளுடன் பெண் உடல் நசுங்கி பலி
பல்லடம் கடை வீதியில் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பிய போது ஸ்கூட்டர் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாயும், மகளும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.;
இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி கிருத்திகா (வயது 35). இவரும், இவரது தாயார் மகாராணி (55) என்பவரும் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு ஸ்கூட்டரில் மகாலட்சுமி நகரிலிருந்து பல்லடம் கடைவீதிக்கு வந்தனர். பின்னர் பொருட்கள் வாங்கிவிட்டு தாயும், மகளும் மகாலட்சுமி நகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு ரோடு சந்திப்பில் திரும்ப முயற்சிக்கும்போது, பொள்ளாச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்வதற்காக வந்த கன்டெய்னர் லாரியும் சந்திப்பில் திரும்ப முயன்ற போது ஸ்கூட்டர் வருவதை பார்த்து கன்டெய்னர் லாரி டிரைவர் பிரேக் பிடித்தார். ஆனால் இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கன்டெய்னர் லாரி நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் கன்டெய்னரின் அடியிலேயே ஸ்கூட்டரில் வந்த தாயும்-மகளும் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கன்டெய்னர் லாரியை கிரேன் மற்றும் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அகற்றினர். பின்னர் விபத்தில் பலியானவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த சென்னையைச் சேர்ந்த யோகராஜ் (40) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விபத்தால் கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. ஸ்கூட்டரில் வந்த பெண்கள் கன்டெய்னர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பல்லடம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்ந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. இது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.