சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று அதிகாலை கனமழை கொட்டித்தீர்த்தது. தமிழகப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.;
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை முதலே கடும் வெயில் வாட்டி வதைத்தது. புழுக்கமும் அதிகமாக இருந்ததால் பொது மக்கள் அவதிப் பட்டனர். திடீரென மாலை முதல் சென்னை, புறநகர் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று அதிகாலையில் இருந்து இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக சென்னை மாநகரப் பகுதிகளில் நேற்று 17 மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவற்றை மாநகராட்சிப் பணியாளர்கள் உடனுக் குடன் வெட்டி அகற்றினர். கனமழை கொட்டித் தீர்த்த நிலையிலும், மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து சுரங்கப் பாலங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு, போக்குவரத்து சீராக இருப்பதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கண்ணகி நகர் பகுதியில் வரலட்சுமி என்ற தூய்மைப் பணியாளர், பணியின்போது, மின்கசிவு ஏற்பட்ட மழைநீரில் கால் வைத்தபோது, மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து வரலட்சுமியின் குடும்பத்தாரை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தவுடன், மின்வாரியம் மற்றும் வரலட்சுமி தூய்மைப் பணி மேற்கொள்ளும் அர்பேசர் சுமித் நிறுவனம் சார்பில் தலா ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சத்தை இழப்பீட்டு தொகையாக வழங்கினார். போக்குவரத்து பாதிப்பு: கனமழையால் மாநகரில் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில மழைநீர் தேங்கி, நேற்று காலை போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன் சாவடி பகுதியில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன.