ஏடிஎம் ஃபிரான்சைஸ் மோசடி பிரபலங்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்த பொதுமக்கள் காவல் ஆணையரிடம் புகார்.;
கோவை: ஏடிஎம் ஃபிரான்சைஸ் (ATM Franchise) அமைத்து அதிக வருமானம் தருவதாகக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த IZET E-PAYMENT PVT LTD நிறுவனத்தின் உரிமையாளர்கள் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோர் மீது பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். சமூக வலைத்தள விளம்பரங்களை நம்பி நூற்றுக்கணக்கானோர் 50,000 முதல் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். இயந்திரங்கள் வழங்கப்படாமலும், வழங்கப்பட்டவை விரைவில் செயல்படாமல் போனதாலும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நிறுவனத்தின் தொடக்க விழாவில் சைலேந்திரபாபு உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டதைக் கண்டு நம்பியே முதலீடு செய்ததாகவும், தற்போது நிறுவனம் மூடப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறி, தங்கள் பணத்தை மீட்டுத் தரக் கோரியுள்ளனர்.