என்ஐஏ சோதனை அரசின் ஒடுக்குமுறைச் செயல் - பெ.மணியரசன்
நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களின் வீடுகளில் என்ஐஏ நடத்திய சோதனை அரசின் ஒடுக்கு முறைச் செயல் என தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்
Update: 2024-02-05 07:19 GMT
. இதுகுறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்ட அறிக்கை: நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 6 பேரின் வீடுகளில் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பினர் சோதனை நடத்தி, அவர்களின் செல்போன்கள், சிம்கார்டுகள், பென்டிரைவ்கள், லேப்டாப்கள் போன்றவற்றை எடுத்துச் சென்றுள்ளனர். அவர்கள் விடுதலைப் புலிகள் அமைப்பை ஆதரிக்கிறார்கள் என்று என்ஐஏ குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பு உலகத்தில் எங்கும் செயல்படவில்லை. ஆட்சியாளர்கள் வேண்டுமென்றே அதைத் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்துள்ளனர். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் நடைபெற்றுள்ள இந்த சோதனை புலன் விசாரணையாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்களின் அரசியல் நகர்வாகவே தெரிகிறது. நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களை தீவிரவாதிகள் போல சித்தரித்துள்ளனர். அவர்களது வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியது அரசின் ஒடுக்குமுறைச் செயலாகும். அரசின் இந்த நடவடிக்கை வன்மையாக கண்டனத்துக்குரியது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.