தேர்தல் விதிமுறை அமல் - கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன ?

திருமண மண்டபங்களில் அரசியல் கட்சி கூட்டம் நடத்த முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-03-20 04:11 GMT

ஆட்சியர் அருணா 

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, அச்சக உரிமையாளர்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நகை அடகு வாங்குபவர்கள், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஊட்டியில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடந்தது.

ஆட்சியர் அருணா கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, வாக்குப்பதிவு குறித்த தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும். எனவே, திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகளில் அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்களின் கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும். விடுதிகளில் தங்குவோர் விவரங்கள் சரியான பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும். மேலும் அந்த விவரங்கள் போலீஸார் மூலம் தேர்தல் அலுவலர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர், எந்த ஒரு தனிப்பட்ட நபருக்கும் நகை அல்லது பத்திரத்தின் பேரில் கணிசமான ரொக்க தொகையினை வழங்கும் முன்னர் அவர் அரசியல் அல்லது வேட்பாளர் தொடர்புடையவரா என அறிந்து கொள்ள வேண்டும். வாக்காளர்களை கவரும் விதத்தில் டோக்கன் விநியோகத்தின் மீது பணமோ அல்லது பொருளோ கொடுக்க கூடாது.

வாக்காளர்களை கவரும் விதத்தில் ஏற்கனவே அடகு வைக்கப்பட்ட நகைகளை இலவசமாக திருப்பி தர ஏற்பாடு செய்ய கூடாது. அச்சக உரிமையாளர்கள், அரசியல் கட்சியினர் வேட்பாளர்கள் மற்றும் இதர தேர்தல் தொடர்புடைய விளம்பரங்கள், நோட்டீஸ், பிளக்ஸ் அச்சிடும்பொழுது தங்கள் நிறுவனத்தின் பெயர்கள் சம்மந்தப்பட்ட விளம்பரங்களில் அச்சிடப்பட வேண்டும். மேலும், அதன் நகலை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் செலவின கணக்குகள் ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) ஒப்படைக்க வேண்டும். அந்த செலவின கணக்குகள் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர்களின் செலவின கணக்கில் சேர்க்கப்படும். எனவே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், அச்சகங்கள் உள்பட அனைத்து துறைகளும் விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News