போக்சோ சட்டம்‌ குறித்து நீலகிரி போலீஸார் விழிப்புணர்வு!

ஊட்டியில் போக்சோ சட்டம் குறித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Update: 2024-06-19 04:16 GMT

இந்தியாவில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க 2021-ம் ஆண்டு போக்சோ சட்டம் உருவாக்கப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் புகார் அளிக்கலாம். இந்த சட்டம் வந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் பலருக்கும் இது குறித்து தெரிவதில்லை. எனவே நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில், ஊட்டி ஊரக காவல் காவல் கண்காணிப்பாளர் விஜயலட்சுமி மேற்பார்வையில் ஊட்டி ஊரக மகளிர் காவல் ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையிலான குழுவினர் போக்சோ வழக்குகள் அதிகம் பதிவாகும் "பிளாக்ஸ்பாட்" எனப்படும் பகுதிகளில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:- குழந்தைகளுக்கு பெரும்பாலும் தெரிந்த உறவினர்கள் மூலம் அதிக அளவில் பாலியல் தொல்லை நடக்கிறது. இதேபோல் ஆசிரியர்கள், பணியாளர்கள் 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளுக்கு நேர்ந்தது குறித்துப் புகார் அளித்தால் வழக்கு, விசாரணை என்று குழந்தைகள் அலைக்கழிக்கப்படுவார்கள் என்கிற அச்சமே பலரையும் புகார் அளிக்கத் தயங்கச் செய்கிறது. ஆனால் உண்மை அது கிடையாது. குழந்தை மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்துப் புகார் அளிக்க நாம் காவல்நிலையத்துக்குச் செல்ல வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. புகாரைப் பெற்றுக்கொள்ள போலீசார் வீட்டுக்கு வருவார்கள். அப்படி வரும்போது சீருடையைத் தவிர்த்து சாதாரண உடையில் வருவார்கள்.

குழந்தையிடம் வாக்கு மூலம் பெறுவதற்காக நீதிமன்றத்துக்குக் குழந்தையை அழைத்துச் சென்றால் அங்கிருக்கும் நீதிபதி, பொதுவான வழக்குகளை விசாரிப்பதுபோல் இருக்க மாட்டார். அங்கிருக்கும் டேபிளில் சாக்லேட், பொம்மை போன்ற வற்றை வைத்து, குழந்தையிடம் நட்புடன் பேசுவார். சாட்சி சொல்லும்போது தனக்குத் தீங்கிழைத்தவரைப் பார்த்தால் குழந்தைகள் அச்சப்படக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகக் குழந்தைகள் எந்தச் சூழலிலும் குற்றம்சாட்டப்பட்டவரைப் பார்க்க முடியாதபடி பார்த்துக் கொள்வார்கள். குழந்தைகள், தனியாக ஒரு அறையில் அமரவைக்கப்படுவார்கள். அங்கே பொம்மைகளோடு குழந்தைகள் விளை யாடிக்கொண்டிருக்க, குழந்தையின் செயல்பாடுகளை நீதிபதி மட்டுமே பார்க்க முடியும்.

இதில் கையாளப்படும் சொற்களும் கவனிக்கத்தக்கவை. இதில் எந்த இடத்திலும் ‘ரேப்’ என்கிற சொல்லே வராது. மாறாக ‘பாலியல் துன்புறுத்தல்’ என்பதைத்தான் பயன்படுத்துவார்கள். புகார் கொடுப்பதில் இருந்து சட்ட நடவடிக்கைகளில் பங்குபெறும் வரையில் குழந்தையின் பெயரோ, குடும்பத்தினரைப் பற்றிய தகவலோ, குழந்தையை அடையாளம் காணும் வகையில் வேறு எந்தச் செய்தியுமோ ஊடகங்களில் வெளியிடக் கூடாது. பாலியல் குற்றம் செய்தவர்களுக்கு எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை திருமணம் செய்து தரக்கூடாது. மொத்தத்தில் தவறு செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்து உளவியல் ரீதியாக குழந்தையை இயல்பாக வாழ தயார்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News