ஒரே தெருவில் 400 வாக்குகள் இல்லை - பாஜக தேர்தல் கமிஷனிடம் புகார்

மயிலாடுதுறையில் ஒரே தெருவில் 400 வாக்காளர் பெயர் நீக்கம் தொடர்பாக தேர்தல் பொது பார்வையாளரிடம் பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் புகார் மனு அளித்தார்.

Update: 2024-04-21 02:58 GMT

புகார் மனு அளிக்க வந்த பாஜகவினர் 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட மகாதானத் தெரு தேசிய மேல்நிலைப் பள்ளியில் உள்ள 143 மற்றும் 144 ஆவது பூத்துகளில் 1189 வாக்குகள் உள்ளன. இங்கு கடந்த தேர்தல்களில் வாக்களித்த சுமார் 400க்கும் மேற்பட்டோரின் வாக்குகள் இந்த தேர்தலின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த அப்பகுதி வாக்காளர்கள் மற்றும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் வாக்குச்சாவடியின் முன்பு அமர்ந்து இரண்டு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் உதவி அலுவலருமான யுரேகா தலைமையில் நடைபெற்ற அமைதி பேச்சு வார்த்தையில் மாலை 4 மணிக்குள் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று வாக்களிக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.

ஆனால் வாக்குப்பதிவு நேரம் முடியும் வரை அவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு தரப்படவில்லை. இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளரான கன்ஹூராஜ் பகதே-விடம் பாஜக மத்திய அரசு வழக்கறிஞர் ராஜேந்திரன் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், மகாதானத் தெருவில் உள்ள 143 மற்றும் 144 வது பூத்துகளில் வாக்காளர்களின் கருத்துக்கள் மற்றும் ஆட்சேபனைகளை கோராமல் 400-க்கும் மேற்பட்டோரின் பெயர்களை நீக்கி இருப்பது சட்ட விரோதம் என்பதால் அந்த பூத்தில் மறுவாக்குப் பதிவு நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்போது பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன், மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News