நோ ஹெல்மெட்....? எஸ் பைன்

நாமக்கல்லில் தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, ஹெல்மெட் அனியாமல் டூ வீலர் ஓட்டிவந்த 30 பேருக்கு ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2024-01-22 08:04 GMT

விழிப்புணர்வு 

 தேசிய சாலை பாதுகாப்பு மாதம், வட்டார போக்குவரத்து துறை சார்பில், கடந்த 15ம் தேதி முதல், வரும் பிப்ரவரி 14 வரை, சாலை பாதுகாப்பு விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, நாமக்கல்லில் ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து, வட்டார போக்குவரத்து துறை சார்பில், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது. நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, நாமக்கல் வடக்கு, தெற்கு போக்குவரத்து அலுவலர்கள் முருகேசன், முருகன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

நாமக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரபாண்டியன், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வினியோகம் செய்தார். அதில், தமிழகத்தில், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களை குறைத்து, சாலை பாதுகாப்பை மேம்படுத்தி விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கிட உறுதிமொழி ஏற்கின்றேன். தலைக்கவசம் அணியாமல் டூ வீலர் ஓட்டமாட்டேன், மொபைல் போனில் பேசியபடி வாகனம் ஓட்டமாட்டேன். குடிபோதையில் வாகனம் ஓட்டமாட்டேன் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியின்போது, ஹெல்மெட் அணியாமல் டூ வீலர் ஓட்டி வந்தவர்களுக்கு, அதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து, ஹெல்மெட் அணியாமல் வந்த, 30 பேருக்கு தலா ரூ. 1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மகேஸ்வரி, சரவணன், நித்யா, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாஜகான் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News