பாஜகவால் தமிழ்நாட்டிற்கு பிரயோஜனம் இல்லை : கடம்பூர் ராஜூ
தமிழகத்தின் நலனை மத்திய பாஜக அரசு காதில் வாங்கவில்லை. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருந்தாலும், நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசினார்.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணியை ஆதரித்து முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கடம்பூர், சிதம்பரபுரம், அகிலாண்டபுரம், கொப்பம்பட்டி, குருவி நத்தம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் "பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருந்த போது தமிழக நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசிடம் முன் வைத்தோம். கச்சத்தீவை மீட்க வேண்டும், காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், முல்லைப் பெரியாறு பிரச்சினை தீர்க்க வேண்டும், நீட் தேர்வினை ஒழிக்க வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனையை விரைவாக கொண்டு வர வேண்டும், நெய்வேலியில் உள்ள என்.எல். சி யில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தோம்.
ஆனால் எந்த கோரிக்கையும் மத்திய அரசு காதில் வாங்கவில்லை., ஆகையினால் கூட்டணியில் இருந்து வெளியே வந்து விட்டோம். மத்தியில் பாஜக மீண்டும் ஒருவேளை ஆட்சிக்கு வந்தாலும் வரலாம், அதை பற்றி நமக்கு கவலை இல்லை. பாஜக டெல்லிக்கு ராஜாவாக இருக்கலாம், ஆனால் நமக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. தமிழக பிரச்சினைகளை தீர்க்காத தேசிய கட்சி உடன் கூட்டணி தேவையில்லை என்று அதிமுக முடிவு எடுத்து விட்டது.