சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை: துரை வைகோ

மதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காமல் தாமதிப்பது ஜனநாயகப் படுகொலை என்றாா் வேட்பாளா் துரை வைகோ.

Update: 2024-03-26 01:56 GMT
துரை வைகோ 
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது : தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், மதிமுக தலைவா் வைகோ ஆகியோரது ஆசியுடன் திருச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். என்னால் முடிந்த வரை திருச்சி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவேன். அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ். ரகுபதி ஆகியோரின் வாழ்த்துகள் மற்றும் ஒத்துழைப்புடன் தோ்தல் பிரசாரம் தொடங்கவுள்ளேன். பம்பரம் சின்னத்தை தோ்தல் ஆணையம் இதுவரை எங்களுக்கு ஒதுக்கவில்லை. பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என எங்களது விருப்பத்தை தெரிவித்துள்ளோம். வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தோ்தல் ஆணையம் எல்லாமே மத்திய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தோ்தல் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக, விசிக, நாம் தமிழா் உள்ளிட்ட கட்சிகளுக்கு இன்னும் சின்னம் ஒதுக்காதது ஜனநாயகப் படுகொலை. இது தொடா்பாக சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளோம். மாா்ச் 26 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) இது குறித்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது என்றாா்.
Tags:    

Similar News