விளவங்கோடு தொகுதி காலியானதாக அரசிதழில் அறிவிப்பு

தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் சேர்த்து நடத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

Update: 2024-02-29 01:42 GMT
முன்னாள் எம் எல் ஏ விஜயதரணி

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த 2011, 2016, 2021 தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் அகில இந்திய மகிளா  காங்கிரஸ் பொதுச்செயலாளராகவும்  தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கொரடாவாகவும் செயல்பட்டு வந்தார்.  பிப்ரவரி 24ஆம் தேதி புதுடெல்லியில் ஒன்றிய அமைச்சர் முருகன் முன்னிலையில் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.

பின்னர் பாரதிய ஜனதா தலைவர் நட்டாவையும் அவர் சந்தித்து பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளீட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அவர் கட்சித் தலைவர் கார்க்கேவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவி ராஜினாமா செய்கிறேன் என்று விஜயதரணி எம்எல்ஏ தமிழக சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். 

இதனை அடுத்து பிப்ரவரி 25ஆம் தேதி வெளியிட்ட தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் விளவங்கோடு  சட்டமன்ற தொகுதி பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து காலியானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் வரும்.நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. வரும் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் சேர்த்து நடத்தப்படுவது உறுதியாகி வருகிறது.

Tags:    

Similar News