நாய்களால் தொல்லை - பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் நாய்கள் கடித்து 3 மாடுகள், 1 ஆடு உயிரிழப்பு -  நான்கு பேரை நாய் கடித்ததால் மருத்துவ சிகிச்சை: கிராம மக்கள் அவதி

Update: 2024-02-03 12:24 GMT

 நாய்களால் தொல்லை - பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் அருகே கத்தரிநத்தம் கிராமத்தில் நாய்கள் கடித்ததால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 கறவை மாடுகள், ஒரு ஆடு உயிரிழந்தது. மேலும் நான்கு பேரை நாய் கடித்ததால் அவர்கள் மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவிலை அடுத்த கத்தரிநத்தம் கிராமத்தில் வடக்கு தெரு, நடுத் தெரு, தெற்கு தெரு, கோயில் தெரு என நான்கு தெருக்கள் உள்ளது. இந்த ஊரில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இங்கு ஏராளமானோர் நாய்களை வளர்த்து வருகின்றனர். இந்த நாய்களால் தற்போது கிராம மக்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளனர். மேலும், அதே நேரத்தில் பிரசித்தி பெற்ற காளஹஸ்தீஸ்வரர் கோயில் இந்த ஊரில் அமைந்துள்ளதால் ஏராளமானோர் தினமும் கோயிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர் இந்நிலையில் இவ்வூரில் உள்ள சில நாய்கள் ஆடு, மாடுகளையும், மனிதர்களையும் கடித்து வருகிறது.  இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும், குறிப்பாக குப்புசாமி, கணேசன், கண்ணன் ஆகியோரது கறவை பசு மாடுகளை நாய் கடித்ததால் அந்த மாடுகள் சிகிச்சை பலனின்றி இறந்தது. அதேபோல் சைதம்பாள் என்பவருடைய இரண்டு ஆடுகளையும் நாய்கள் கடித்ததால் அவற்றில் ஒரு ஆடு சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தன. இதையடுத்து தற்போது அண்ணாதுரை (50), என்பவரையும், மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கோபால் (48) அவரது மனைவி சங்கீதா (40), மகன் யோகேஷ் (14) ஆகியோரை நாய்கள் கடித்துள்ளது. இதனால் அவர்கள் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து நாய்களின் தொல்லையால் அந்த கிராம மக்கள் பீதிக்கும், அவதிக்கும் ஆளாகியுள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம் அந்த கிராமத்தில் உள்ள நாய்களை பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News