பொதுமக்களுக்கு இடையூறு - கார் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு.
கோவையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சண்டையிட்டு கொண்ட கார் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கோவை: ஆத்துப்பாலம் புட்டுவிக்கி பாலம் சந்திப்பில் குனியமுத்தூர் தலைமை காவலர் தினேஷ்குமார் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக பயணம் செய்த மசக்காளிபாளையம் சுந்தரம் வீதியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும் சுகுணாபுரம் ரெயின்போ காலனி பகுதியை சேர்ந்த உமர்பரூக் என்பவருக்கும் இடையே வாகனம் ஓட்டி வந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து நிறைந்த இந்த சாலையின் நடுவே கார்களை நிறுத்தி இருவரும் சண்டையிட்டுள்ளனர். பாலக்காடு பிரதான சாலையில் நடந்த இந்த சண்டை காரணமாக போக்குவரத்து பாதிக்கபட்டு வாகனங்கள் நீண்ட வரிசியில் நின்று கொண்டிருந்தன. சண்டை முற்றி கைகலப்பாக மாறிய நிலையில் இதில் ஒருவரை ஒருவர் தங்களிடம் இருந்த குடிநீர் பாட்டில்கள் கொண்டு தாக்கி கொண்டதால் கார் கண்ணாடிகள் உடைந்தது.இதனையடுத்து பணியில் இருந்த காவலர் தினேஷ்குமார் இரு தரப்பினர் மீதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்ததை தொடர்ந்து இருவரும் குனியமுத்தூர் காவல் நிலையம் அழைத்து செல்லபட்ட பின்னர் இருவரும் ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.