செங்கிப்பட்டியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் உறுதி

செங்கிப்பட்டியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Update: 2024-06-13 09:28 GMT

பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி சரகம் அயோத்திபட்டியில், செங்கிப்பட்டி - அயோத்திப்பட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும். குண்டுங்குழியுமாக உள்ள காலனி சாலையை புதுப்பித்து தரவேண்டும்.

அயோத்திப்பட்டி கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்குத் தெருவில் தெருச்சாலை அமைத்து தரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜூன் 11 செவ்வாய்க்கிழமை காலை செங்கிப்பட்டியில், திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

  இதையடுத்து செங்கிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில் பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை இயக்குனர் செந்தில்குமார்,

மேற்பார்வையாளர் ஹாஜா மைதீன், செங்கிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், பூதலூர் காவல் நிலைய தலைமைக் காவலர் திருமால் ஆகியோர் கலந்து கொண்டனர்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பூதலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.பாஸ்கர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர் மற்றும் கோ.வீரமணி, க.வெங்கடேசன், வினோத், கண்ணன், சித்திரவேல், தங்கவேல், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில், சாலை தொடர்பாக வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் வேலை தொடங்கப்படும் என பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி அளித்தார். காவேரி குடிநீர் செங்கிப்பட்டி கிராம குடிநீர், குழாய்களில் இருந்து பிரிவு எடுக்கப்பட்டு, நேர முறைப்படி உடனடியாக தண்ணீர் வழங்க குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதேபோல் மற்ற கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்தனர். இதையடுத்து நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags:    

Similar News