அதிகாரிகள் அளித்த உறுதிமொழி - விவசாயிகள் போராட்டம் வாபஸ்
ஏரிகளை அழிக்காத வகையில் நெடுஞ்சாலைத் துறை சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததால் விவசாயிகளின் தண்ணீா் அருந்தா தொடா் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Update: 2024-02-15 07:25 GMT
தமிழக விவசாயிகள் சங்கம் (கட்சி சாா்பற்றது) சாா்பில் அதன் திருச்சி மாவட்டத் தலைவா் ம. ப. சின்னதுரை தலைமையில், திருச்சி மண்டல நீா்வளத்துறை தலைமைப் பொறியாளா் அலுவலகம் முன், தண்ணீா் அருந்தாமல் தொடா் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. திருச்சியின் அரைவட்ட சுற்றுச்சாலைப் பணிக்காக ஏரிகளை அழிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை தொடங்கிய போராட்டத்தில் பங்கேற்ற ஒருவருக்கு இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். மேலும், போலீஸாரும், நீா்வளத்துறை அதிகாரிகளும் தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், ஏரிகளை பாதுகாப்பதாக நீா்வளத்துறை சாா்பில் எழுத்துப் பூா்வமாக உறுதியளிக்கப்பட்ட பிறகு புதன்கிழமை முதல் போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளனா் விவசாயிகள்