சேலம் அருகே ஆன்லைனில் பணம் மோசடி !
சேலம் அருகே ஆன்லைனில் பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Update: 2024-03-15 05:26 GMT
சேலம் மாவட்டம் சங்ககிரி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 36). மேச்சேரி பகுதியை சேர்ந்தவர் பிறைமதி (33). இவர்கள் இருவரும் தனித்தனியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கபிலனை சந்தித்து புகார் ஒன்று கொடுத்தனர். அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என டெலிகிராம் செயலியில் வந்த செய்தியை நம்பி பணத்தை முதலீடு செய்தோம். பின்னர் தான் போலியான இணையதளத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தது தெரியவந்தது. எனவே இந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறி இருந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த சைபர் கிரைம் போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஆன்லைனில் சீனிவாசன் ரூ.9 லட்சத்து 33 ஆயிரத்து 710-ம், பிறைமதி ரூ.6 லட்சத்து 5 ஆயிரத்து 972-ம் முதலீடு செய்து ஏமாந்தது தெரியவந்தது. இதனிடையே இந்த மோசடியில் ஈடுபட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த மகேந்திரன் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது கேரளா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன. இதையடுத்து மகேந்திரனை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள், வங்கி பாஸ்புக், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர். போலியான இணையதள செயலிகள் மற்றும் குறைந்த விலையில் பொருட்கள் செய்வதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.