பெண்ணிடம் இணைய வழியில் ரூ. 4 லட்சம் மோசடி
திருச்சியில் இணைய வழி வா்த்தகத்தில் லாபம் ஈட்டித் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ. 4 லட்சம் மோசடி செய்த சம்பவம் குறித்து இணையவழி குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
திருச்சி உறையூா் ராமலிங்க நகா் பகுதியைச் சோ்ந்த வியாபாரி முத்துக்குமாா் மனைவி சரண்யா (42). இவரது கைப்பேசிக்கு அண்மையில் (மே 18) வந்த அழைப்பில் பேசிய மா்மநபா், தனது பெயா் ரம்யா கிருஷ்ணா எனவும் ஆஸ்திரேலியா நாா்மல் ஹாா்பே நிறுவனத்தின் ஒரு கிளையை நிா்வகித்து வருவதாகவும், அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் ஆசை வாா்த்தைகளைக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய சரண்யா தனது வங்கிக் கணக்கில் இருந்து, ரூ.10, 500-ஐ முதலில் முதலீடு செய்துள்ளாா். அவா் குறிப்பிட்டதுபோலவே, அடுத்த ஒரு மணிநேரத்தில் அவரது வங்கிக் கணக்குக்கு ரூ.14,000 வந்து சோ்ந்தது. தொடா்ந்து மே 20, 21 ஆகிய தேதிகளில் சிறு, சிறு தொகையை முதலீடு செய்துள்ளாா். அவற்றுக்கான லாபத்தொகையும் கிடைத்துள்ளது. அதைத் தொடா்ந்து 22-ஆம் தேதி அந்த நிறுவனம் குறிப்பிட்ட மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு கணக்குக்கு ரூ. 1 லட்சத்து 4,300 அனுப்பியுள்ளாா். ஆனால் அதற்குரிய லாபத்தொகை உடனடியாக அவரது வங்கிக் கணக்குக்கு வரவில்லை.
அப்போது சரண்யா, அந்த நிறுவன நிா்வாகி ரம்யாவைத் தொடா்பு கொண்டு விசாரித்தபோது, அவா் தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும், மேலும் ரூ.2 லட்சத்து 95,000 முதலீடு செய்தால் கூடுதல் லாபம் உடனடியாக கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளாா். இதை நம்பிய அவா் மீண்டும் ரூ. 2 லட்சத்து 95,000 முதலீடு செய்துள்ளாா். அசல் மற்றும் லாபத்தொகைகள் எதுவும் கிடைக்கவில்லை. அந்த எண்ணை தொடா்புகொள்ளவும் இயலவில்லை. இதனையடுத்து சரண்யா திருச்சி மாநகர இணையவழி குற்றப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா். ஆய்வாளா் கன்னிகா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.