ஊட்டி சட்டமன்ற அலுவலக கட்டுமான பணி: வாகன ஓட்டிகள் அவதி

ஊட்டி சட்டமன்ற அலுவலகம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் கட்டுமான பொருட்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்

Update: 2024-03-23 13:44 GMT

கட்டுமான பணியால் போக்குவரத்து பாதிப்பு 

நீலகிரி மாவட்டம் ஊட்டி சட்டமன்ற தொகுதியில் சுமார் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஊட்டி சட்டமன்ற அலுவலகம் பிரிக்ஸ் பள்ளியில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் அமைந்து உள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் சட்டமன்ற அறைக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இ சேவை மையங்கள் ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஊட்டி சட்டமன்ற அலுவலகத்திலும் இ சேவை மையக் கட்டுமான பணிகள் மற்றும் முன் பகுதியில் தளம் அமைக்கும் பணிகள் கடந்த 2 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக எம்-சாண்ட் மணல், கற்கள் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் சட்டமன்ற அலுவலகம் அருகே சாலையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். தற்போது தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் பணிக்கான வாகனங்களும் அந்த பகுதியில் அடிக்கடி செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன.

கமர்சியல் சாலையில் இருந்து ஆட்சியர் அலுவலகம் செல்லும் பிரதான சாலையில் கட்டுமான பொருட்களை கொட்டி வைத்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, அரசு மருத்துவமனைக்கு இந்த வழியாக ஆம்புலன்ஸ்களும் அடிக்கடி செல்லும். எனவே உடனடியாக கட்டுமான பொருட்களை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News