2026ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே எங்கள் நோக்கம் - அன்புமணி ராமதாஸ்

2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதே பாமகவின் நோக்கம் என பிரசாரத்தின் போது அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Update: 2024-04-16 07:10 GMT

அன்புமணி ராமதாஸ் பிரசாரம் 

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலினை ஆதரித்து மயிலாடுதுறையில் பிரசாரம் மேற்கொண்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறிப்பாக டெல்டா பகுதி மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல். திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே டெல்டாவை அழிக்க நினைக்கிறது. பாமக என்ற கட்சி இல்லாவிட்டால் டெல்டா மாவட்டம் இருந்திருக்காது. திமுக ஆட்சியில் கடலூர், நாகை மாவட்டங்களில் 45 இடங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்தை கொண்டு வந்திருந்தால் டெல்டா அழிந்திருக்கும். மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்திட்டவர் அன்றைய துணை முதல்வரான இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்தான்.

எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டம் இயற்றச் செய்தோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் மட்டும் கொண்டுவரப்படாதிருந்தால் டெல்டா மாவட்டங்களை கூறு போட்டு விற்றிருப்பார்கள். 57 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட இந்த திராவிட கட்சிகளால் புதிதாக எந்த திட்டங்களையும் தர இயலாது. என்னுடைய நோக்கம் டெல்டாவை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். அதற்கு என்னுடன் உறுதுணையாக இருங்கள். திமுக கட்சத்தீவை மட்டும் தாரை வார்க்கவில்லை. காவிரியில் தண்ணீர் வராமல் கர்நாடகா மூன்று அணைகளையும் கட்டியதும் திமுக ஆட்சிக்காலத்தில்தான். அதனால் தான் தண்ணீர் தட்டுப்பாட்டால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

தற்போது மேக்கேதாட்டுவில் அணைகட்டுவோம் என்று கர்நாடகா அரசு கூறுகிறது. ஆனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதுபற்றி இதுவரை வாய்திறக்காமல் அந்த கட்சிகளுடன்தான் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறார். திமுக தேர்தலுக்கு தேர்தல் வெற்று வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி வருகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் வைத்தனர்.

ஆனால் அதில் ஒன்றைக்கூட தமிழக அரசு நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றால் 2 ஆண்டுகள் காத்திருங்கள். அல்லது உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் இந்த தேர்தலில் திமுக கூட்டணியை தோற்கடித்தால் பயம் ஏற்பட்டு உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கையெழுத்து இட்டுவிடுவார். வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது 66 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்தவர்கள்தான் துரோகிகள் அவர்கள் நம்மை துரோகி என்று கூறுவதற்கு தகுதி கிடையாது என்றார். முடிவில் நரிக்குறவர் சமுதாய மக்கள் அன்புமணி ராமதாஸுக்கு பாசிமணி அணிவித்தனர்.

Tags:    

Similar News