பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா - நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
நாட்டரசன் கோட்டையில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நடைபெற்ற பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலாவில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்
Update: 2024-01-05 01:29 GMT
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன் கோட்டை நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் திருக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி திருநாளை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக வாகன மண்டபத்தில் ஶ்ரீ விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்திலும், ஶ்ரீ முருகப்பெருமான் மயில் வாகனத்திலும், ஸ்ரீ சிவகாமி அம்பாள் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ கரிகால சோழீஸ்வரர் பிரியாவிடை அம்மனுடன் மற்றொரு ரிஷப வாகனத்திலும் மற்றும் சண்டிகேஸ்வரர் ஸ்ரீ சிறிய ரிஷப வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர். அதனைதொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கோபுர தீபம், கும்ப தீபம், நாகதீபம் நட்சத்திர தீபம் மற்றும் சோடச உபசாரங்கள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து, வேத மந்திரங்கள் முழங்க மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதனையடுத்து மங்கள வாத்தியங்களுடன் தெய்வங்களை வாகனங்களில் எழுந்தருள செய்து நகர்வலம் வந்தனர். வாகனங்களில் பவனி வந்த பஞ்ச மூர்த்தி தெய்வங்களுக்கு ஏராளமான பக்தர்கள் அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர்.