கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தகால் முகூர்த்தம்
ஜெம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்திட நேற்று யாகசாலை பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-02-02 10:47 GMT
தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்திட நேற்று யாகசாலை பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. தஞ்சாவூர் அருகே 18 கிராமங்களைக் கொண்ட காசவளநாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோவிலூரில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர பெருவிழா மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. பழமையான இக்கோயிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கோயிலை திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்திட காசவளநாட்டினரும், இந்து சமய அறநிலையத்துறையும் முடிவு செய்தது. அதன்படி கடந்த 10.3.2023 அன்று கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழக அரசு ரூ.62 லட்சம் நிதியை திருப்பணிக்கு ஒதுக்கீடு செய்தது. மேலும் உபயதாரர்கள் மூலம் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ராஜகோபுரம், மூலவர் கோபுரம் மற்றும் அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, கஜலட்சுமி, சண்டீகேஸ்வரர் ஆகிய பரிவார தெய்வங்களின் சன்னதிகளின் கோபுரங்களும் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் இருப்பதால், வரும் மார்ச் 7-ம் தேதி கும்பாபிஷேகம் நடத்திட கோயில் நிர்வாகம் மற்றும் காசவளநாட்டினர் முடிவு செய்தனர். இதையொட்டி நேற்று காலை யாகசாலை பந்தல் அமைப்பதற்கான பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக பந்தகாலுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் பந்தகால் நடப்பட்டது. கோயில் செயல் அலுவலர் பெ.ராஜரெத்தினம் முன்னிலையில், பூஜைகளை தி.கார்த்திகேயன் சர்மா செய்தார். இதில் 18 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து கும்பாபிஷேக பூர்வாங்க பூஜைகள் மார்ச் 1 ம் தேதி தொடங்குகிறது. பிரமாண்டமான யாகாசாலை மண்டபத்தில் நான்கு காலை யாகசாலை பூஜையும், 24 குண்டங்களும், 8 வேதிகைகளும் அமைக்கப்படவுள்ளது. தொடர்ந்து மார்ச் 7 -ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். படவிளக்கம்: தஞ்சாவூர் அருகே காசவளநாடு கோவிலூரில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜெம்புகேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று யாகசாலைக்கான பந்தகால் முகூர்த்தம் நடைபெற்றது.