ஆயிரம் விளக்கில் நீட் தேர்வு மையம் முன்பு பெற்றோர்கள் வாக்குவாதம்

ஆயிரம் விளக்கு பகுதியில் நீட் தேர்வு தேவையா இல்லையா என தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-05-05 12:23 GMT

வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெற்று வரக்கூடிய நிலையில் சென்னையிலும் பல்வேறு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. அதில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசன் மெமோரியல் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த மாணவர்கள் தேர்வு மையத்திற்குள் சென்ற நிலையில் பெற்றோர்கள் வெளியே காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அப்போது திடீரென நீட் ஆதரவு பெற்றோருக்கும் எதிர்க்கும் பெற்றோருக்கும் இடையே நீட் வேண்டுமா? வேண்டாமா ? என வாக்குவாதம் நடைபெற்றது. நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று மருத்துவராக வர வேண்டும் என்று ஒரு தரப்பினர் சொல்ல மற்றொரு தரப்பு நீட் தேர்வுதான் வேண்டும் என்றால் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எதற்கு என வாதம் செய்தனர். மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு என்பது மனப்பாடம் செய்து அப்படியே எழுதுவது எனவும் (வாமிட் எடுப்பது போல எனவும்) ஒரு தரப்பு பெற்றோர்கள் சொல்ல மருத்துவ இடங்களில் 50% நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் 50 சதவீதம் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் மெரீட்டில் வருபவர்களுக்கும் என கொடுத்தால் நாங்கள் நீட் தேர்வை வரவேற்போம் என நீட் தேர்வை எதிர்க்கும் பெற்றோர்கள் வாக்குவாதம் செய்தனர்.

தேர்வு மையத்திற்கு வெளியே பெற்றோர்கள் வாக்குவாதம் நடைபெற்ற நிலையில் அங்கு வந்த காவலர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

Tags:    

Similar News