நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

நீலகிரி தொகுதியில் இதுவரை ஒரு சுயேட்சை உள்பட இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்று உள்ளனர்.

Update: 2024-03-19 16:19 GMT

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 543 மக்களவைத் தொகுதிகளை கொண்ட இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டங்களாகவும் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதியும் நடக்க இருக்கிறது. இதன்படி வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. வேட்புமனுவை தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி கடைசிநாளாகும். வரும் 28ம் தேதி வேட்புமனு பரீசிலனை செய்யப்படும். வேட்புமனுவை திரும்பப்பெற மார்ச் 30ம் தேதி கடைசி நாள்.

ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இதையொட்டி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நாளை (புதன்கிழமை) வேட்போனு தாக்கல் தொடங்க உள்ளதால், நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக பிரதான வாயிலில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு முழு பணிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் அலுவலக சுற்றுவட்டார பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: வேட்பு மனு தாக்கல் செய்ய வருபவர்களுடன் 4 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள். மற்றவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படுவார்கள். வாகனங்களும் 100 மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே நிறுத்தப்படும். 100 மீட்டர் தூரத்தை குறிக்கும் வகையில் சாலையில் எல்லை கோடுகள் வரையப்பட்டு உள்ளது. மேலும் இரும்பு தடுப்புகள் மூலம் போலீசார் சாலைகளில் அரண் அமைத்து உள்ளனர். நீலகிரி தனி தொகுதி என்பதால் வேட்பாளர் முன்வைப்பு தொகையாக ரூ. 12,500 செலுத்த வேண்டும். அதேபோல் வேட்பாளர், சாதி சான்றிதழ் நகலையும் இணைக்க வேண்டும்.

இதுவரை ஒரு சுயேட்சை உள்பட இரண்டு பேர் மட்டுமே வேட்பு மனு வாங்கி சென்று உள்ளனர். முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவிக்காததால் அவர்கள் யாரும் வேட்பு மனுக்களை நாளை தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. வேட்புமனு தாக்கல் செய்ய காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அனுமதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News