தூத்துக்குடியில் பேருந்து நிலைய வாசலில் பயணிகள் காத்திருக்கும் அவலம்
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்திற்குள் இரவு நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வழியாக கன்னியாகுமரி, திருச்செந்தூர், திருநெல்வேலி, மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும், மதுரை, திருச்சி, சென்னை, ராமேஸ்வரம் வேளாங்கண்ணி, கோவை, திருப்பூர் உட்பட தமிழகம் முழுவதும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் இரவு நேரங்களில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் வழியாக திருச்செந்தூர் செல்லும் எந்த பேருந்துகளும் இரவு 9மணிக்கு மேல் பழைய பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. இதனால் பழையகாயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர் வழியாக தங்களது ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ் நிலைய வாசலில் காத்துக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் பஸ்கள் அனைத்தும் பஸ் நிலைய வாசலில் நின்று செல்வதால் பயணிகளும் வாசலில் இரவு நேரங்களில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
பேருந்து நிலையம் வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்டக்டர் கையெழுத்து போட்டுவிட்டு செல்ல வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் கண்காணிப்பாளர் அலுவலகம் மாலை 6 மணி வரை மட்டும் செயல்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் அலுவலகம் பூட்டியிருப்பதால் கண்டக்டர் கையெழுத்து போடுவதில்லை. அ
தனால் தான் பஸ்களை வெளியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கிறோம் என்று கண்டக்டர்கள் கூறுகிறார்கள். இதற்கு உடனடியாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து பேருந்துகளும் இரவு நேரங்களில் பழைய பஸ் நிலையத்துக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும் என்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.