பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனையாளர்கள் என்ற முன்னாள் டிஜிபி

”அடித்து வளர்க்கப்படும்,  குழந்தைகளை விட பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனை படைப்பார்கள்”

Update: 2024-02-24 19:08 GMT
பள்ளி விழாவில் சைலேந்திர பாபு

அடித்து வளர்க்கும் குழந்தைகளை விட பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனை படைப்பதாக  முன்னாள் இயக்குநர்  சைலேந்திரபாபு பள்ளி ஆண்டு விழாவில் பேசியுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அலிவலம் எஸ்.இ.டி வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 16ஆம் ஆண்டு விழா, உணவுத் திருவிழா  நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு பள்ளியின் நிர்வாக இயக்குநர் லெ.கோவிந்தராசு தலைமை வகித்தார். பள்ளி அறங்காவலர் குழு உறுப்பினர் அசோகன், பள்ளி தாளாளர் சித்திரா கோவிந்தராசு, பள்ளி முதல்வர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி  முதுகலை தமிழ் ஆசிரியர் இராஜதுரை வரவேற்றார்.

முதுகலை வேதியியல் ஆசிரியர் அடைக்கலம் ஆண்டறிக்கை வாசித்தார். ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு முன்னாள் காவல்துறை இயக்குனர்  சி.சைலேந்திரபாபு பேசுகையில், “ இந்த உலகத்தில் மிக எளிமையான வேலை என்பது படித்தல் மட்டுமே,  அதனை ரசித்து படியுங்கள்,  100 விழுக்காடு மதிப்பெண் பெற வேண்டும் என்று நான் சொல்ல மாட்டேன்,  100 விழுக்காடு அர்ப்பணிப்போடு படியுங்கள் என்று சொல்வேன். தினம் தினம் உங்கள் தாய்மார்களுக்கு நன்றி கூறுங்கள்,  கட்டி அணைத்து முத்தமிடுங்கள்,  இந்த உலகில் எனக்கு முக்கியமானவர் நீங்கள் என்று கூறுங்கள் . அதே போல் பெற்றோர்களும் குழந்தைகளை அடித்து வளர்க்காதீர்கள்,  காவல் நிலையத்தில் கூட தற்பொழுது குற்றவாளிகளை அடிப்பதில்லை,  பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதனையாளர்கள் ஆகின்றனர். உங்கள் குழந்தைகளை எப்பொழுதும் அடுத்தவரோடு ஒப்பிட்டு வளர்க்காதீர்கள்.  அவர்களை ஊக்கப்படுத்துங்கள் பெருமைப்படுத்துங்கள் அவர்கள் சாதனை புரிவார்கள்"  என்றார்.

மேலும், “ஆபிரகாம் லிங்கன் படிப்பில், அரசியலில், தொழிலில் தோல்வியடைந்த பொழுது,  தொடர்ந்து படிப்பதையும், எழுதுவதையும், பேசுவதையும் நிறுத்தவில்லை,  இதனை சொல்லி அவர் நண்பர்கள் கேலி செய்த பொழுது,  என் தாய் சொல்லி உள்ளார். நான்  மிகப்பெரிய மனிதனாக வருவேன் என்று,  அவ்வாறு நாளை நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாகும் வரை பேசுவதையும் எழுதுவதையும் படிப்பதையும் விட மாட்டேன் என்றார். அதேபோல் ஒரு நாள் அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றார்" என்றார். 

தொடர்ந்து, பேசிக்கொண்டிருந்த பொழுது, மேடையில் இருந்து இறங்கி சென்று மாணவ, மாணவிகளிடையே கேள்வி கேட்டு,  சிறப்பான பதில் சொல்லிய மாணவ, மாணவிகளுக்கு அவர் எழுதிய  புத்தகங்களை  பரிசளித்தார். உணவுத் திருவிழாவில்  மாணவர்கள் பாரம்பரிய உணவு வகைகள், சிறுதானிய சிற்றுண்டிகள் உள்ளிட்ட உணவு வகைகளை தயார் செய்து காட்சிக்கு வைத்திருந்தனர். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.  

Tags:    

Similar News