பள்ளிபாளையம் அருகே பயங்கரம் - தெரு நாய் கடித்து 20 பேர் காயம்

பள்ளிபாளையம் அருகே தெரு நாய் கடித்ததில், 20 பேர் காயமடைந்தனர். நாய்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Update: 2024-03-17 11:41 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. சுமார் 50-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்துவது, சண்டையிட்டுக் கொள்வது ,நடு சாலையில் படுத்து உறங்குவது என தெருநாய்கள் அட்டகாசம் அதிகரித்து காணப்படுகிறது.

நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அவ்வப்போது தெருநாய்கள் பிடிக்கப்பட்டு வெறிநாய் தடுப்பூசி மற்றும் கருத்தடை ஊசி உள்ளிட்டவை செலுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும்  தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாத நிலையே உள்ளது. இந்நிலையில் சனிக்கிழமை அன்று  மாலை  ஒட்டமெத்தை, பூலாக்காட்டூர், குமாரபாளையம் சாலை உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற தெரு நாய் ஒன்று சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் செல்வோரை துரத்தி துரத்தி கடித்துள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இதனை அடுத்து நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள்  பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர். நாய் கடியால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில்,   பெருமாள்மலை பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி சின்னம்மா, ஒட்டமெத்தை பகுதியை சேர்ந்த மில் தொழிலாளி குப்புராஜ், பள்ளிபாளையம் நகர மன்ற வார்டு முன்னாள் உறுப்பினர் 69 வயதுடைய ரங்கசாமி உள்ளிட்ட ஒன்பது பேர் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் ஒரே நேரத்தில் 20க்கும் மேற்பட்டோரை கடித்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அரசு பள்ளிகள், அருகிலேயே தெரு நாய்கள் அதிகளவு சுற்றி திரிவதால் பள்ளிக்கு வரும் மாணவ மாணவியர்கள் அச்சமடைகின்றனர். பெற்றோர்களும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News