மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் நகராட்சி அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைப்பெற்றது.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி குமாரபாளையம் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சாலையோர மாற்றுத்திறனாளிகளிடம் தினமும் 80:00 ரூபாய் வசூல் செய்வதை ரத்து செய்ய வேண்டும், வரி கொடுக்க இயலாத மாற்றுத்திறனாளிகளிடம் ஒப்பந்ததாரர்களின் பணியாளர்கள் கடுமையாக, தகாத வார்த்தையில் பேசுவதை கைவிட வேண்டும், நகராட்சி மூலம் டெண்டர் விடும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் முன்னுரிமை வழங்கி பணிகள் கொடுக்க வேண்டும், பஸ் ஸ்டாண்ட் மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கும் போது, மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் முன்னுரிமை வழங்கி கடைகள் கொடுக்க வேண்டும், குமாரபாளையம் தாலுக்கா அளவிலான அனைத்து அரசு அலுவலகங்களில், வணிக வளாகங்களில், திரை அரங்கங்களில், உள்ளிட்ட அனைத்து இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வுதளம், அல்லது கைதாங்கி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குமாரபாளையம் தாலுக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், முக்கிய சாலைகளில் யாருக்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் பெட்டிக்கடை வைத்து வாழ அனுமதி வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து சங்க மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது, கோரிக்கை மனு ஆணையாளர் சரவணன் வசம் கொடுக்கப்பட்டது. போராட்டம் நடத்திய இடத்திற்கு வந்து, கோரிக்கை மனு பெற்று, வரி வசூல் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இதர கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று, அரசு அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த போராட்டம் காலை 09:00 மணிக்கு துவங்கி காலை 11:00 மணியளவில் நிறைவு பெற்றது. நிர்வாகிகள் சுப்பிரமணி, நடராஜன், சுரேஷ், சதீஷ்குமார், செந்தில்குமார், விஜயா உள்பட பலர் பங்கேற்றனர்.