மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 407 மனுக்கள் ஏற்பு
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 407 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
Update: 2023-10-31 05:26 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 407 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் பேரூராட்சியைச் சார்ந்த தமிழரசி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் இலவச வீட்டுமனைப் பட்டாவினை வழங்கினார். பட்டாவை பெற்றுக் கொண்ட தமிழரசி கடந்த 4 ஆண்டுகளாக மனு கொடுத்துப் போராடி வந்ததாகவும் கணவரை இழந்து உள்ள நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் மன அளித்த ஒரு மாத காலத்தில் தனக்கு பட்டா அளித்தது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இதற்காக மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, சமூக பாதுகாப்பு திட்டத் தனித்துணை ஆட்சியர் கார்த்திக்கேயன், மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.