பேராவூரணி இளைஞர் இந்தியக் குடிமைப்பணி தேர்வில் வெற்றி
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தை சேர்ந்த மாணவர் இந்திய குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று ஐஎப்எஸ் (வனத்துறை) பணிக்கு தேர்வாகியுள்ளார்.
மத்திய அரசுப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு யூபிஎஸ்சி தேர்வின் மூலம் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்திய குடிமைப்பணி தேர்வில் சுமார் 150 இடங்களுக்கான ஐஎப்எஸ் தேர்வை நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் எழுதியதில், தமிழகத்தை சேர்ந்த 8 பேர் வெற்றி பெற்றனர்.
இதில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள கல்லூரணிக்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -ரேணுகா தம்பதியின் மகன் புவனேஷ் (28) தேர்ச்சி பெற்று அண்மையில் நடைபெற்ற நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்று ஐஎஃப்எஸ் (வனத்துறை )பணிக்கு தேர்வாகியுள்ளார்.
இது குறித்து புவனேஷ் கூறியது, சென்னை ஐஐடியில் எம்டெக் படித்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை தேர்வெழுதி 6 ஆவது முறையாக தேர்ச்சி பெற்றுள்ளேன். இந்தியக் குடிமைப்பணி தேர்வை பொருத்தவரை விடாமுயற்சி வெற்றியை தரும் என்பது நிதர்சனமான உண்மை . ஒவ்வொரு முறை தேர்ச்சி பெறாத போதும் துவண்டு விடாமல், அடுத்தமுறை வெற்றி நிச்சயம் என்ற உறுதியோடு எழுதினேன். கடந்த ஆண்டு தேர்வு எழுத தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் எனக்கு ஊக்கத்தொகையாக ரூ.25 ஆயிரம் வழங்கியது பயனுள்ளதாக இருந்தது. தமிழக அரசுக்கும், தமிழக முதல்வருக்கும் நன்றி" என்றார்.