பெரியகுளம் : பலத்த காற்றுடன் கன மழை
பெரியகுளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்க்கும் மேலாக சாரல் மலையும் பெய்தது. 6வது நாளாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து முற்றிலும் குளிர்ச்சி நிலவியது. தொடர்ந்து கோடை மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 மாத காலமாக பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததோடு வெப்பத்தின் தாக்கம் இரவிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களாக மாலை மற்றும் இரவு நேரத்தில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.
இந்நிலையில் நேற்று 6வது நாளாக பெரியகுளத்தை சுற்றியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பெரியகுளத்தை சுற்றியுள்ள லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி, கைலாசப்பட்டி, வைகை அணை, ஜெயமங்கலம், வடபுதுப்பட்டி, மதுராபுரி, தேவதானப்பட்டி கெங்குவார்பட்டி, மஞ்சளார் அணை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பிற்பகல் 2 மணி முதல் பலத்த காற்று கூடிய கனமழை பெய்ய துவங்கியது.
அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதனைத் தொடர்ந்து 6 நாட்களாக கோடை மழை பெய்து வருவதால் கோடையில் இரண்டாம் போகம் நெல் நடவு செய்த விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.