தபால் வாக்கு செலுத்திய மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள்
சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் சட்டப் பேரவை தொகுதியில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்குக்கு மேற்பட்ட மூத்தகுடி மக்கள் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனர்.
சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் படிவம் 12டி}ன்படி அஞ்சல் மூலம் வாக்குப்பதிவு செய்ய விருப்பம் தெரிவித்து 1,561 மாற்றுத்திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்ட 1,814 மூத்த வாக்காளர்களும் விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர்.
விண்ணப்பித்தவர்களின் வீட்டுக்கு சென்று அஞ்சல் வாக்குகளை பெற 40 குழுக்கள் அமைக்கப்பட்டு, அஞ்சல் வாக்குப் பதிவு கடந்த 2 தினங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், அரியலூர் சட்டப்பேரவைத் தொகுதிகுட்பட்ட அம்மாக்குளம், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவுகளை சிதம்பரம் மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மல்லூர் சுப்புராயபுரம், க.பொய்யூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையங்கள், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்தவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.