சேலம் அருகே புதிய சமுதாய கூடம் அமைக்க கோரி மனு
சேலம் அருகே புதிய சமுதாய கூடம் அமைக்க வேண்டும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது.
சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் குடியரசு தினவிழாவையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது.
இதில், பங்கேற்ற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொண்டப்பநாயக்கன்பட்டி புரட்சி தமிழர் மக்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் தலைவர் அடிவாரம் சுசீந்திரன், சட்ட ஆலோசகர் வக்கீல் சுரேஷ்குமார், செயலாளர் சதீஷ், துணைத்தலைவர் கோபிநாத் ஆகியோர் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கொண்டப்பநாயக்கன்பட்டி சத்யா நகர் 3-வது வார்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருவதால் அவர்களின் வசதிக்காக சமுதாய கூடம் அமைத்து கொடுக்க வேண்டும்.
மேலும், சத்யா நகரில் பல்வேறு இடங்களில் கான்கிரீட் சாலை, கழிவுநீர் கால்வாய் வசதி செய்து தரக்கோரி பலமுறை ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கோட்டங்கல் முனியப்பன் கோவில் பகுதியில் சேதமடைந்த தார்சாலையை சீரமைக்க வேண்டும்.
ஏற்காடு முதல் கொண்டை ஊசி வளைவில் சத்யா நகர் 3-வது வார்டுக்கு செல்லும் வழித்தடம் மண் பாதையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்பட்டு பல்வேறு விபத்துக்கள் நடப்பதால் அதனை தார்சாலையாக மாற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.