வங்கி அதிகாரிகளை கண்டித்து ஆட்சியரிடம் தொழில் முனைவோர் மனு

Update: 2023-11-20 08:45 GMT

தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மனு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கோவை,கண்ணப்ப நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45).இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகில் மைக்ரோ தொழிற்சாலை வைத்துள்ளார்.சிஎன்சி மிஷின் வைத்து தொழில் நடத்தி வரும் இவர் கடந்த 2017 ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்பிஎல் வங்கியில் ரூ.1கோடியே 31 லட்சம் வீட்டை அடமானம் வைத்து கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து 2020 வரை தவணை தவறாமல் மாதம் தோறும் ரூ.1,97,000 கட்டி வந்த நிலையில் கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் தொழில் பாதிக்கபட்ட நிலையில் தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார். 2021 ம் ஆண்டு வங்கியில் பணம் கட்ட கால அவகாசம் வேண்டும் என்று கேட்ட நிலையில் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.இதனையடுத்து 2022 ஆண்டு ரூ.10 லட்சம் தவணை தொகையை கட்டி உள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் தவணை கட்டவில்லை என்றால் வங்கியில் உள்ள விதிகளின் படி சர்பாசி ஆக்ட் மூலம் கடன் கட்ட வைத்துள்ள அடமான சொத்து பறிமுதல் செய்யப்படும் என்றும்,உடனடியாக ரூ.20 லட்சம் பணம் கட்டினால் மட்டுமே தற்போது அவகாசம் வழங்க முடியும் என்று கூறியுள்ளனர். மேலும் தற்போது வட்டி யுடன் ரூ.1 கோடியே 70 லட்சம் கட்ட வேண்டும் என்று கறாராக கூறியுள்ளனர்.மேலும் வீட்டை ஜப்தி செய்ய வங்கி அதிகாரிகள்,போலீசார்,வங்கியின் வழக்கறிஞர் என்று உள்ளிட்டோர் கணேஷ் ஆனந்த் வீட்டிற்க்கு வந்தவர்கள் வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றுள்ளனர்.இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இன்று மனு அளித்தனர். இது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் பேசுகையில் சர்பாசி என்ற மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து கடனை தருவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.இந்த சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட தலையிட முடியும் எனவும் தெரிவித்தவர் ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

Tags:    

Similar News