பிரதமரின் பேச்சு புரியாமல் அமர்ந்திருந்த கிராம மக்கள்!
சீர்காழி அரசு மருத்துவமனையில் நவீன ஆய்வுக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டிய பிரதமர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 1 கோடியே 2 லட்சம் மதிப்பீட்டில் புதிய அதிநவீன ஆய்வுக்கூடம் கட்டுவதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் திருவிடைமருதூர் ராமலிங்கம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சுகாதாரத் துறை இணை இயக்குனர் டாக்டர் பானுமதி சீர்காழி, அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் அருண் ராஜ்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்வில் பாரத பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி பேருரை ஆற்றியது விழா அரங்கில் காணொளி வாயிலாக காண்பிக்கப்பட்டது.
பிரதமர் மோடி முழுவதும் இந்தியில் உரையாற்றிய நிலையில் அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாததால் விழா அரங்கில் இருந்த ஊழியர்கள் அரசு அதிகாரிகள் உட்பட அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தங்களது தொலைபேசியை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். அடிக்கல் நாட்டப்பட்டதா விழா முடிந்ததா என்பது கூட தெரியாமல் அனைவரும் திகைக்கும் நிலை ஏற்பட்டது.
இறுதியில் பேசிய மயிலாடுதுறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் நமது மாவட்டத்தில் சீர்காழியை தேர்ந்தெடுத்து அதிநவீன ஆய்வுக்கூடம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்ததுடன் குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வுக்கூடம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் எனவும் தெரிவித்துக் கொண்டார். ஒன்றிய அரசு விழாவில் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தொகுத்து வழங்கியிருந்தால் என்ன பேசுகிறார்கள் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என அவர்களுக்குள்ளாக பேசி கொண்டனர்.