பிரசாரத்திற்கு சென்ற பா.ம.க. அருள் எம்எல்ஏ கார் சோதனை
பிரசாரத்திற்கு சென்ற பா.ம.க. அருள் எம்எல்ஏ கார் சோதனை. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை.
Update: 2024-04-11 01:59 GMT
சேலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக தனது கட்சி வேட்பாளரான அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் தனது காரில் சென்றார். அவரது காரை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அருள் எம்.எல்.ஏ. மற்றும் அவரது உதவியாளர்கள் காரை விட்டு கீழே இறங்கினர். பின்னர் பறக்கும் படை அதிகாரிகள் எம்.எல்.ஏ. காரில் சோதனை செய்தனர். ஆனால் காரில் பணமோ, பொருட்களோ எதுவும் இல்லை. எம்.எல்.ஏ. சாலையில் நிற்பதை பார்த்த அந்த வழியாக சென்ற சிலர் அங்கு கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்களிடம், அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள். எனவே கூட்டம், கூடாமல் செல்லுங்கள் என்று அருள் எம்.எல்.ஏ. கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். சுமார் 20 நிமிட சோதனைக்கு பிறகு அருள் எம்.எல்.ஏ. அங்கிருந்து காரில் ஏறி பிரசாரத்திற்கு சென்றார்.