திருப்பனந்தாள் காசிமடம் பொய்கைக்குளம் சுற்றுச்சுவர் இடிப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 09:20 GMT
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்பனந்தாள் காசி மடத்தில் உள்ள பொய்கை குளத்தைச் சுற்றி பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த 400 அடி நீள சுற்றுச்சுவரை அக்.29-ம் தேதி நள்ளிரவு சிலர் இடித்துவிட்டனர். இதுதொடர்பாக மடத்தின் மேலாளர் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், தமிழ்த் தேசிய முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகேயன்(46), மாநில ஊடக பிரிவு செயலாளர் முகமது பிலால் உள்ளிட்ட 10 பேர் மீது திருப்பனந்தாள் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும், சுவர் இடிப்பு தொடர்பாக கார்த்திகேயன் தனது பேஸ்புக்கில் வீடியோவை பதிவேற்றம் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகள், குளத்தின் சுற்றுச் சுவரை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைதளம் வாயிலாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுதொடர்பாக நவ.1-ம் தேதி மேகநாதன் என்பவரை போலீஸார் கைது செய்திருந்தனர். கார்த்திகேயனை போலீஸார் தொடர்ந்து தேடி வந்த நிலையில், நேற்று அவரை கைது செய்து, திருவிடைமருதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.