பரந்துார் நில எடுப்பு அலுவலகம் பாதுகாப்பிற்கு போலீசார் நியமனம்
பொன்னேரிக்கரை விமான நிலைய நில எடுப்பு அலுவலக பாதுகாப்பிற்காக ஆறு போலீசார் காவல் பணியில் ஈடுபடுகின்றனர்.
Update: 2024-03-04 12:01 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துாரில், புதிய விமான நிலையத்திற்கு நிலம் எடுக்கும் பணியை, 'டிட்கோ' எனும் தமிழக தொழில் துறை, பிப்., 24ல் அறிவித்தது. மேல்பொடவூர் கிராமத்தில், 93 ஏக்கர் நிலம், 218 பேரிடம் இருந்து வாங்கப்பட உள்ளது. இதற்கு, பொது அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில், நிலத்தின் உரிமையாளர்களுக்கு தனித்தனியே 'நோட்டீஸ்' வழங்கப்பட உள்ளன. இவர்கள், 30 நாட்களுக்குள் ஆட்சேபனை தெரிவிக்கலாம். இதன் மீதான விசாரணை ஏப்., 4ல் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராம போராட்டக் குழுவினர், பரந்துார் விமான நிலைய நில எடுப்பு அலுவலகத்தை, பிப்., 26ல் முற்றுகையிட சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். அடிக்கடி போராட்டம் நடத்தப்படுவதால், பொன்னேரிக்கரை விமான நிலைய நில எடுப்பு அலுவலக பாதுகாப்பிற்காக, ஆறு போலீசார், மூன்று 'ஷிப்ட்' அடிப்படையில் காவல் பணியில் ஈடுபடுகின்றனர்."