மர்மமான முறையில் வாலிபர் மரணம் - காவல்துறை தீவிர விசாரணை
புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில் வாலிபரின் சடலம் கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;
Update: 2023-12-24 04:52 GMT
மர்மமான முறையில் வாலிபர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை நெடிய சாலை பகுதியில் அகஸ்தீஸ்வரத்தை சேர்ந்த மார்ட்டின் கிங் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டி வருகிறார். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மழை காரணமாக அங்கு கட்டுமான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அங்கு யாரும் செல்லவில்லை. இந்நிலையில் நேற்று மீண்டும் கட்டுமான பணிக்காக பணியாளர்கள் வந்துள்ளனர். அப்போது கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிமெண்ட் அடுக்கி வைக்கப்பட்ட பகுதியில் ஒருவர் இறந்து கிடப்பதை கண்டு பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது தொடர்பாக அருமனை போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர் விசாரணையில் பிணமாக கிடந்தவர் சிதறால் பகுதியை சேர்ந்த மனோன்மணி என்பவரது மகன் சுனில் (32) என தெரியவந்தது. இவர் அங்கு எப்படி வந்து இறந்தார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.