பரமத்தி வேலூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது
பரமத்தி வேலூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-16 07:35 GMT
பரமத்தி வேலூர் அருகே உள்ள அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வேலூர் காவல் நிலையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது மணல் திருட்டில் ஈடுபட்ட முக்கிய நபரை பிடித்து நடவடிக்கை எடுப்பதாக பரமத்தி வேலூர் காவல் துணை கண்காணிப்பாளர் சங்கீதா மற்றும் ஆய்வாளர் ரங்கசாமி உறுதியளித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை வேலூர் காவல் உதவி ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அனிச்சம்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக மணல் எடுத்து வந்தது தெரியவந்தது. அதனையடுத்து வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி உத்தரவின் பேரில் சட்ட விரோதமாக அனுமதியின்றி காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்து வந்த சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்டு தேடப்பட்டு வந்த அனிச்சம்பாளையத்தை சேர்ந்த ராஜாவை (38) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.