போலீசாரை கத்தியால் குத்திய வழக்கு: 5ஆண்டு சிறை தண்டனை
திருட்டு வழக்கில் கைது செய்ய சென்ற போலீசாரை கத்தியால் குத்திய வழக்கில் குற்றவாளிக்கு 5ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்ன பட்டாளமமன கோயில் தெருவை சேர்ந்தவர் மாதப்பன் (எ) மாதேஷ் (27) இவர் மீது தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் திருட்டு வழக்கு இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி பைரமங்கலம் கிராமத்தில் பேருந்து நிறுத்தம் அருகே நின்ற வாலிபர் மாதேஷை குற்றதடுப்பு போலீசார் பிடிக்க சென்றனர்.
அப்போது சிவகுமார் (31) என்ற போலீசாரை மாதேஷ் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து அப்போதைய கெலமங்கலம் காவல் ஆய்வாளர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மாதேஷை கைது செய்து சிறையில் அடைத்தார். இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கலைவாணி இன்று தீர்ப்பு வழங்கினார்.
அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்த குற்றத்திற்கு மாதேஷ்க்கு இரண்டு வருட சிறை தண்டனையும் 500 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்தார். மேலும் போலீசை கத்தியால் குத்தி காயப்படுத்திய குற்ற குற்றத்திற்காக 3 வருடம் சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்தார். அபராதம் கட்ட தவறினால் மேலும் மூன்று மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து கெலமங்கலம் போலீசார் மாதேஷை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.