வாக்கு எண்ணிக்கை மைய சிசிடிவிகள் செயலிழப்பு - ஆட்சியர் விளக்கம்

தென்காசி வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழந்ததற்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ததே காரணம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2024-05-01 07:39 GMT

ஆட்சியர் கமல் கிஷோர் 

 தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் கூறியதாவது : மக்களவை பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு 37-தென்காசி (தனி) மக்களவைத் தொகுதிக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. தென்காசி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் கடையநல்லூர் வட்டம், கொடிக்குறிச்சி கிராமம், USP கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் மத்திய ஆயுத காவல் படை உள்ளடக்கிய மூன்றடுக்குப் பாதுகாப்புடன் கூடிய முத்திரையிடப்பட்ட பாதுகாப்பு அறையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள USP கல்லூரி வளாகம் மற்றும் பாதுகாப்பு அறைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

(நேற்று) ஏப்ரல் 30ம் தேதி பிற்பகல் 3.45 மணியளவில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள USP கல்லூரி பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமிராக்கள் செயலிழந்துள்ளது. உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளைச் சுற்றிலும் செயலிழந்த கேமிராக்கள் சரி செய்யப்பட்டு மாலை 6.30 மணியளவில் கேமிராக்கள் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தின் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள செயலிழந்த கேமிராக்களை சரி செய்து விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள முத்திரையிடப்பட்ட அறை மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மூன்றடுக்கு காவல் பாதுகாப்புடன் பாதுகாப்பாக உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News