பொன்னேரி: மழைநீர் கால்வாய் பணியை துரிதமாக முடிக்க கோரிக்கை

பொன்னேரி நகராட்சியில் நடைபெறும் மழைநீர் கால்வாய் பணியை துரிதமாக முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-04-08 07:00 GMT

குவிக்கப்பட்டுள்ள மண் குவியல் 

பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஓரத்தில், மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நான்கு மாதங்களாக நடைபெற்று வருகிறது. சாலையோரத்தில், ஏற்கனவே இருந்த கால்வாய் கட்டுமானங்களை அகற்றி, புதிய கான்கிரீட் பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக பள்ளம் தோண்டுபோது, வெளியேற்றப்படும் மண், அதே பகுதியில் சாலையோரங்களில் குவித்து வைக்கப்படுகிறது.

நாள் முழுதும், தொடர்வாகன போக்குவரத்து உள்ள இந்த சாலையில், குவிந்து கிடக்கும் மண் குவியல்கள் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. உடைத்து எடுக்கப்பட்ட பழைய கால்வாய் கான்கிரீட் கட்டுமானங்களும் அதே பகுதியில் இருப்பதால், வாகன ஓட்டிகளில் அதில் மோதி தடுமாற்றத்துடன் பயணிக்கின்றனர். பாதசாரிகள் நடந்து செல்வதற்கு வழியில்லாமல், சாலையில் வாகனங்களுக்கு இடையே புகுந்து செல்கின்றனர். இந்த சாலை வழியாக, அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு நடந்து செல்லும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மழைநீர் கால்வாய் பணிகளை துரிதமாக முடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், சாலையில் உள்ள மண் குவியல்களை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags:    

Similar News