தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை கடத்தியவர் கைது

சேதுபாவாசத்திரம் அருகே, அரசால் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ள கடல் அட்டைகளை விற்பனை செய்யக் கொண்டு சென்றவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

Update: 2024-05-20 08:28 GMT

கடல் அட்டை, கடல் ஆமை, கடல் பசு, கடல் குதிரை உள்ளிட்ட அரியவகை கடல்வாழ் உயிரினங்களை பிடிப்பதற்கு அரசு தடைவிதித்துள்ளது. வனத்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மீனவர்களிடையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், தடைசெய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்கள் தவறுதலாக மீனவர் வலைகளில் சிக்கினால் அவற்றை திரும்பவும் உயிருடன் கடலில் விடும் மீனவர்களுக்கு, ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில்  பட்டுக்கோட்டை வனச்சரகத்திற்குட்பட்ட, சேதுபாவாசத்திரம் அருகே உள்ள செந்தலைவயல் கடற்கரையில் பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் சந்திரசேகரன், வனவர் சிவசங்கர், ஆவணம் பீட் வனக் காப்பாளர் கலைச் செல்வன் மற்றும் வனக்காப்பாளர் மணவாளன் ஆகியோர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, சாக்குப்பையுடன் சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்று கொண்டிருந்த செந்தலைவயல் கிராமத்தைச் சேர்ந்த கலிபுல்லா என்பவரை நிறுத்தி சோதனை செய்த போது, சுமார் 30 கிலோ எடையுள்ள 92 கடல் அட்டைகளை பிடித்து விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி, கலிபுல்லா மீது உயிரின குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு பேராவூரணி நீதிமன்றத்தில் நேர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின்பேரில் தஞ்சாவூர் கிளைச் சிறையில் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

Tags:    

Similar News