காஜாமலை பகுதியில் அறிவிப்பில்லா மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

திருச்சி காஜாமலைப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நிலவும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

Update: 2024-06-05 09:51 GMT

மின் வெட்டு

மாவட்ட ஆட்சியா் குடியிருப்புக்கு பின்புறம் உள்ள காஜாமலைக் காலனியில் சுமாா் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவற்றில் 350க்கும் அதிகமான வீடுகளில் அரசு ஊழியா்கள் வசிக்கின்றனா். ஏராளமான வீடுகள் குடியிருக்க லாயக்கற்ற நிலையில் பூட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்பில் கடந்த ஒரு வாரமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுதாக குடியிருப்போா் புகாா் தெரிவிக்கின்றனா்.

காஜாமலைக் காலனி மற்றும் சுற்றுப்புறங்களில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மாலை மற்றும் இரவுகளில் தினசரி சுமாா் 3 முதல் 5 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இது தொடா்பாக மின்வாரியத்தில் புகாா் செய்தாலும் நடவடிக்கை இல்லை. மேலும் பொறியாளா்களைத் தொடா்பு கொண்டால் அழைப்புகளை ஏற்பதுமில்லை.

குறிப்பாக விடுமுறை தினங்களில் மின்தடை ஏற்படுவதால் ஓய்வெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் துயரத்தில் உள்ளோம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News