விஜய பிரபாகரனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம்
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.
ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே விருதுநகர் பாராளுமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய பிரபாகரனுக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க கோரரி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை மேற்கொண்டார்.
அவர் பேசும்போது, விஜயா பிரபாகரனுக்கு 32 வயது தான் ஆகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருக்கு எத்தனையோ கனவுகள், ஆசை இருக்கும். அனைத்தையும் புறம் தள்ளிவிட்டு மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற தன்னுடைய தந்தையின் கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக சிறிய வயதில் பெரிய பொறுப்பை கையில் எடுத்திருக்கிறார். உங்களுக்காக உழைக்க வந்திருக்கிறார் என்றால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
படித்தவர் பண்பானவர் நல்ல குணம் படைத்தவர். இந்த காலத்தில் எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர். அனைத்து மொழிகளும் அறிந்தவர். பல்வேறு வெளிநாடுகளுக்கு சென்ற அனுபவம் உடையவர். இந்தத் தொகுதியை எவ்வாறு முன்னேற்ற வேண்டும் என்பதை அவர் முழுமையாக அறிந்து வைத்துள்ளார். பார்ப்பதற்கு அமைதியாக இருப்பார். வெற்றி பெற்றதும் இந்த தொகுதி இதற்கு முன் பார்க்காத வளர்ச்சியை கொண்டு வருவார். வரும் வழியெங்கும் அடிப்படை வசதிகள் குறைபாடுகள் பார்க்க முடிந்தது.
விஜய பிரபாகரனுடன் இணைந்து நானும் தொகுதிக்குள் வருவேன். ஒவ்வொரு வாக்குறுதியையும் நிச்சயமாக நிறைவேற்றுவேன். மற்ற வேட்பாளர்களை குறைத்து பேசி வாக்கு கேட்க வேண்டிய அவசியம் தேமுதிகவுக்கு கிடையாது. நாங்கள் வந்தால் எப்படி இந்த தொகுதியை முன்னேற்றுவோம் என்று கூறி தான் நாங்கள் வாக்கு கேட்போம். தீப்பெட்டி தொழிற்சாலைகளில் இன்று முதல் 22 ஆம் தேதி வரை வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது
. பட்டாசு தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு தேவையான அனைத்து நலன்களையும் செய்து தருவோம். நாங்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் பிறந்தது, கட்சி தொடங்கியது குலதெய்வம் கோயிலில் குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்தியது அனைத்தும் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தான். இந்த உலகில் மிகவும் பிடித்த ஊர் எது என்றால் மதுரை மற்றும் விருதுநகரை தான் கேப்டன் சொல்லுவார். நடிகர்கள் பல்வேறு உடைகளை அணியும் போது கேப்டன் விஜயகாந்த் தமிழர்களின் பாரம்பரியமான கதர் சட்டை கதர் வேட்டியை மட்டுமே அணிந்தவர். கேப்டனின் தந்தை காங்கிரஸ் கட்சியில் இருந்ததால் காமராஜரை பார்த்து அவர் கதர் அணிந்து கொண்டார். தந்தையை பார்த்து கேப்டன் கதர் ஆடையை அணிந்து கொண்டார். கர்மவீரர் காமராஜர் முதல்வராக பதவியேற்ற தினம் இன்று இந்த சிறப்புமிக்க நாளில் நான் விருதுநகர் வந்துள்ளேன். மக்களுக்கான அனைத்து நல்ல திட்டங்களையும் செய்வோம். என்றார்.