குடிநீர் வழங்கும் ஊராட்சி மன்றத் தலைவி
சொந்த செலவில் வாகனம் வாங்கி, வீடு வீடாகச் சென்று ஊராட்சி மன்றத் தலைவி குடிநீர் வழங்கும் பணியை செய்கிறார்.
வாக்களித்து வெற்றி பெறச் செய்த கிராம மக்களுக்கு, கோடைக்காலத்தில் தன்னுடைய சொந்த செலவில், சுமார் 12 லட்சம் மதிப்புள்ள, புதிய டேங்கர் லாரி வாகனம் வாங்கி, வீடு வீடாகச் சென்று தண்ணீர் வழங்கும் ஊராட்சி மன்ற தலைவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். பட்டுக்கோட்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் போதுமான மழை இல்லாமல் ஏரி, குளங்கள் அனைத்தும் வறண்ட நிலையில் காணப்படுகிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் மட்டுமின்றி கால்நடைகளும் அவதிப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் ஊராட்சி மன்றத் தலைவி மேனகா ஆனந்த், கோடைகாலத்தில் பொதுமக்கள் பயன் பெரும் வகையில், பட்டுக்கோட்டை - தஞ்சை சாலையில் கரம்பயம் பேருந்து நிறுத்தத்தில் நீர் மோர் பந்தல் அமைத்து தினசரி பொதுமக்களுக்கு குடிநீர், நீர் மோர் வழங்கி வருகிறார்.
மேலும், சொந்த செலவில் 12 லட்சம் மதிப்புள்ள டேங்கர் லாரி வாகனத்தை வாங்கி, தன் வீட்டு ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் எடுத்து, வீடு வீடாகத் தேடிச்சென்று தண்ணீர் வழங்கி வருகிறார். இந்நிகழ்வு அப்பகுதி மக்களிடயே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக கரம்பயம் பேருந்து நிலையம் அருகில் ஊராட்சி மன்ற தலைவி மேனகா ஆனந்தால் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தும், குடி நீர் வழங்கும் வாகனத்தை கொடி அசைத்தும் துவக்கி வைத்தார். இதில் திமுக ஒன்றியக் கழக செயலாளர்கள் பார்த்திபன், இராமநாதன், நகரக் கழக செயலாளர் செந்தில்குமார், மற்றும் திமுக ஒன்றிய, நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.