அறுவை சிகிச்சை மூலம் 250 பேருக்கு கால் இழப்பு தடுப்பு

அறுவை சிகிச்சை மூலம் 250 பேருக்கு கால் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 13:51 GMT

அறுவை சிகிச்சை மூலம் 250 பேருக்கு கால் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலுள்ள பாத மருத்துவ மையம் மூலம் ஏறத்தாழ 250 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து கால் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர். பாலாஜிநாதன் தெரிவித்தார்.  தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற சர்க்கரை நோயால் கால் இழப்பைத் தடுப்பது தொடர்பான பயிலரங்கத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: சர்க்கரை நோயாளிகள் கால் இழப்பைத் தடுக்கும் விதமாகத் தமிழக அரசு முன்னெடுத்து, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முன்னோடித் திட்டமாக பாத மருத்துவ மையத்தை 2022, அக்டோபர் 3 ஆம் தேதி தொடங்கியது.

இத்திட்டம் வெற்றிகரமாக உள்ளதால், இதை மாநிலம் முழுவதும் நடைமுறைப் படுத்துவதற்கான திட்டச் செயலாக்கத்தில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மக்களைத் தேடி மருத்துவப் பணியாளர்கள், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்களுக்கு பாத நோயைக் கண்டறிவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து சக்கரை நோயாளிகளையும் கண்டறிவதற்கான முகாம் நடத்தப்பட்டது. இதன் மூலம் 1.75 லட்சம் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. 

இவர்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தோல் தடித்து ஆணி என்கிற புண் வருவதற்கான நிலையில் இருப்பதும், சுமார் 2 ஆயிரம் பேருக்கு காலில் புண் இருப்பதும், ஏறத்தாழ 20 விழுக்காடு சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் உணர்வு இழப்பு ஏற்பட்டிருப்பதும் தெரிய வந்தது. மேலும், பாத மருத்துவ மையத்தில் பரிசோதனை செய்து அறுவை சிகிச்சை அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கான சிறப்பு காலணி அல்லது இயன்முறை மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவம் தேவைப்படுகிறதா எனக் கண்டறியப்பட்டது. இதன் மூலம் ஏறக்குறைய 250 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து, கால் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது. கால் புண்ணால் பாதிக்கப்படும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால், கால் இழப்பு தடுப்பு அறுவை சிகிச்சையும் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது" என்றார் பாலாஜிநாதன். முன்னதாக, பயிலரங்கத்தில் சர்க்கரை நோயாளிகள் பாத பாதிப்பு சங்கத்தின் அகில இந்திய தலைவர் வி.பி. நாராயணமூர்த்தி, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி பேராசிரியர் முகுந்தன், தோல் நோய்யியல் துறைப் பேராசிரியர் டேனியல் ஆகியோர் பேசினர். தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் என். ஆறுமுகம், மருத்துவக் கண்காணிப்பாளர் சி. ராமசாமி, நிலைய மருத்துவ அலுவலர் ஏ. செல்வம், உதவி நிலைய மருத்துவ அலுவலர் முகமது இத்ரீஸ், ஒட்டுறுப்புத் துறைத் தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News